தேனி அருகே நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அருணாசேகர் மீது கடந்த 1996-ம் ஆண்டு, போலி ஆவணங்களை தயாரித்து கார்த்திக் ராஜா என்பவரது சொத்தை அபகரித்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கில் அருணாசேகர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் மீது கார்த்திக்ராஜா தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அருணாசேகர் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் 3 பேரும் கார்த்திக்ராஜாவை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாகவும் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக்ராஜா குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.