டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்றார்.
70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக 48 தொகுதிகளில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில், பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவர் துணை நிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கேரினார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வராக ரேகா குப்தா முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்களாக பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்திரஜ் சிங், கபில் மிஸ்ரா, பங்கஜ் குமார் சிங் பதவியேற்றனர்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ,பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம் சந்த் பைர்வா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.