உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை, இன்னும் 60 நாட்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது. மேலும், டெஸ்லா நிறுவனம் தனது LinkedIn பக்கத்தில், 13 வெவ்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
டெஸ்லா, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் மின்சார கார் நிறுவனமாகும். இந்திய மின்சார கார் சந்தையில் டெஸ்லா நுழைவதற்கு முயற்சி செய்து வந்தது. டெஸ்லா தனது மின்சார கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மிகவும் ஆவலுடன் இருந்து வந்தது.
2021ஆம் ஆண்டு, இந்தியாவில் முதலில் இறக்குமதி செய்யப்பட்டு டெஸ்லா வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகவும், அதன் பிறகே, இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி தொழில் சாலையை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் எலான் மஸ்க். ஆனால் இறக்குமதி வரிகள் உலகின் எந்த பெரிய நாட்டையும் விட இந்தியாவில் மிக அதிகமாக உள்ளதாக விமர்சனம் செய்திருந்தார்.
2022 ஆம் ஆண்டு இந்தியாவில் டெஸ்லா மின் வாகனங்களை விற்பனை செய்வதற்காக இறக்குமதி வரிகளைக் குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மேலும், இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்றால், இந்தியாவில், தனது கார்களை டெஸ்லா உற்பத்தி செய்யாது என்றும் கூறியிருந்தார்.
தொடர்ந்து, வியட்நாமின் மின் வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட் மற்றும் மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா, ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா, ரெனால்ட், மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து புதிய மின்சார வாகனக் கொள்கை குறித்த கூட்டத்தில் எலான் மஸ்க் கலந்து கொண்டார்.
குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்ற புதிய மின்சார வாகனக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. உடனே, இந்தியாவுக்கு வந்து ,பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க். ஆனாலும் கடைசி நேரத்தில், இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டு சீனாவுக்குச் சென்று சீன அதிபரை சந்தித்தார் எலான் மஸ்க்.
முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்களாக (CBUs) இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, இயந்திர அளவு மற்றும் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு (CIF) மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் 70 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம், அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரில் சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவில் விற்பனை நிலையங்களை தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். பெர்லினில் இருந்து டெஸ்லா மின்சார கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவில், டெஸ்லா நிறுவனம், தனது LinkedIn பக்கத்தில், ஆலோசனை மற்றும் சேவை தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 13 வெவ்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மும்பையிலும் டெல்லியிலும் இரண்டு விற்பனை நிலையங்களை டெஸ்லா திறக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது.
மும்பையின் BKC வணிக மாவட்டத்திலும் டெல்லியில் உள்ள ஏரோசிட்டியிலும் டெஸ்லா இரண்டு விற்பனை நிலையங்களுக்கான இடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. சுமார் 5,000 சதுர அடியில் இந்த விற்பனை நிலையங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதலில், சுமார் 21 லட்சத்துக்கும் குறைவான விலையில் உள்ள தனது மின்சார காரை டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப் படுத்த உள்ளது. இந்த இரண்டு விற்பனை நிலையங்களும் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
இந்தச் சூழலில் ,இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்கவும் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் இந்திய அலுவலகம் புனேவில் உள்ளதால், மகாராஷ்டிரா தான் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான டெஸ்லாவின் விருப்பமான உள்ளது. மேலும் புனே அருகே உள்ள சக்கன் பகுதி ஒரு முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாகும். மெர்சிடிஸ் பென்ஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, வோக்ஸ்வாகன் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் சக்கனில் தான் அமைந்துள்ளன.
இந்நிலையில், புனேவுக்கு அருகில் அமைந்துள்ள சக்கன் மற்றும் சிகாலி அருகே உள்ள நிலங்களை இடங்களை டெஸ்லாவுக்கு மகாராஷ்டிர அரசு, வழங்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. டெஸ்லா ஆலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், இறுதி உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
சமீபத்தில் இந்திய அரசு 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் ரக கார்களின் மீதான அடிப்படை சுங்க வரியை 110 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய அரசின் இறக்குமதி வரி குறைப்பு, டெஸ்லா கார் விற்பனைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.