தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க, பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை 24 மணி நேரமும் பணியமர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மாம்பாக்கம் ஆரம்ப சுகாதர நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட ஜமுனா என்ற பெண்ணுக்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியரே பிரசவம் பார்த்தார்.
இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால், ஜமுனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கடந்த 2019 ம் ஆண்டு நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், பிரசவத்தின்போது உயிரிழந்த ஜமுனாவின் கணவருக்கு 4 வாரத்திற்குள் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதர நிலையங்களிலும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் ஆணையிட்டது.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் எந்நேரமும் இருப்பதை உறுதி செய்ய அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவசர நேரத்தில் பயன்படுத்தும் வகையில் அருகருகே இருக்கும் இரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கிடையே 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.