இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி 2 விசைப்படகுகளில் பாம்பன் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
பின்னர் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் வாரிகுல சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தண்டனை காலம் நிறைவடைந்ததால் அவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் விமானம் மூலம், கொழும்புவில் இருந்து சென்னை வந்தடைந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.