சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய எந்தெந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவர், என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த திட்டத்தை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்பு உறுதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கால பூஜைகளுக்கு இடையில் கனகசபையில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு ஏதுவாக சாய்வு தல பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொது தீட்சிதர்கள் தரப்பு தெரிவித்தது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை தரப்பு, பக்தர்கள் சுவாமிக்கு எதிரில் நின்று தரிசனம் செய்ய வேண்டும் என்றும், அதை விடுத்து ஒரு ஓரத்தில் தரிசனம் செய்து கொள்ள அனுமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பொது தீட்சதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையும் தனது கருத்துக்களை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்து ஆணையிட்டனர்.