கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேசிய கல்விக்கொள்கையின் மூலம் இந்தியாவின் பொக்கிஷமாக கருதப்படும் தமிழ்மொழியை தங்கு தடையின்றி மாணவர்கள் கற்கலாம் என தெரிவித்துள்ளார்.
எந்த மாநிலத்தின் மீதும், எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ள தர்மேந்திர பிரதான், மாணவர்களின் நலன் கருதி கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது மாணவர்களுக்கான வாய்ப்புகளை தடுக்கும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், பாஜக ஆளாத மாநிலங்களில் கூட புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக கூறியுள்ள தர்மேந்திர பிரதான், கல்வியில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் கற்பித்தலை NEP வலுப்படுத்தும் என உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக NEP 2020 க்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்தக் கொள்கை வழங்கும் மகத்தான வாய்ப்புகள் மற்றும் வளங்களை இழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் ரூ.5000 கோடியை தமிழக அரசு இழப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.