மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல. மொழி என்பது ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளம். தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி, உலக தாய்மொழி தினமாக கொண்டாடப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய விடுதலையின் போது, இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. அப்போது, பாகிஸ்தானுடன் வங்கதேசம் இணைக்கப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என இரண்டு பகுதிகளாக பாகிஸ்தான் அமைந்தது.
ஒரே மதத்தினராக இருந்தாலும், கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வங்க மொழியே தாய் மொழியாக கொண்டிருந்தனர். இந்நிலையில்,பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக உருது மொழி அறிவிக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு, முகமது அலி ஜின்னா தலைமையிலான பாகிஸ்தான் அரசு, உருது மொழியை பாகிஸ்தானின் ஒற்றை ஆட்சி மொழியாக அறிவித்தது. ஏற்கெனவே,கிழக்கு பாகிஸ்தானில்,கல்வி தேர்வில் இருந்த வங்கமொழியைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது.
1952ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, ‘வங்க மொழி இயக்கம்’’ உருவானது. கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட தொடர் போராட்டத்தை ஒடுக்க ஜின்னா அரசு ராணுவ நடவடிக்கைகளை எடுத்தது. இந்த வங்க மொழிப் போராட்டத்தில், சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய ஐந்து மாணவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வங்க மொழி காக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, இதற்கான இயக்கம் தொடங்கப்பட்ட பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம், 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார்.
தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறவும், அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பிப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ 1999ம் ஆண்டு அறிவித்தது.
அதன்படி, 2000 ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி 21 ஆம் தேதி, உலக தாய்மொழி நாளாக கொண்டாடப் பட்டு வருகிறது.
இந்தியாவில், மொத்தம் 7000 மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 1,500 மொழிகள் ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன. சுமார் 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரத்துக்கும் குறைவான மக்களின் பேச்சு மொழிகளாக உள்ளன.
2011ஆம் ஆண்டின், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியாவில் பேச்சு வழக்கில் 270 தாய்மொழிகள் இருக்கின்றன. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசும் மொழிகளாக 121 மொழிகள் உள்ளன. 1961ம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும் போது 220 மொழிகள் 50 ஆண்டுகளில் அழிவைச் சந்தித்திருக்கின்றன.
நாட்டிலுள்ள 96.71 சதவீத மக்கள் ஏதேனும் ஒரு வரையறை செய்யப்பட்ட மொழியைத் தம் தாய்மொழியாக கொண்டுள்ளனர். ஏறக்குறைய 3.29 சதவீத மக்கள் மட்டுமே வரையறை செய்யப்படாத மொழிகளைத் தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன.
இந்தியாவில், 44 சதவீத மக்கள் இந்தியைத் தாய் மொழியாக கொண்டுள்ள நிலையில், அதிக பேசும் மொழிகள் பட்டியலில் இந்தி முதலிடத்தில் உள்ளது. 8 சதவீத மக்கள் பேசும் நிலையில், வங்காள மொழி இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக , 7 சதவீத மக்கள் பேசும் மராத்திய மொழி மூன்றாவது இடத்தில் உள்ளது.
6.7 சதவீத மக்கள் பேசுவதால் ஐந்தாவது இடத்தில் தெலுங்கு மொழி இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில், 6.4 சதவீத மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ள தமிழ், ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தி பேசும் மக்கள் தொகை 14 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்துள்ளது.
பத்தாயிரம் மக்களுக்குக் குறைவான மக்களால் பேசப்படுகின்ற மொழிகள் விரைவில் அழியும் என்று கூறப்படுகிறது. எந்த மொழியும் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் , மக்கள் பேசுகின்ற மொழியாகவும், இல்லாவிட்டால், அந்த மொழி எத்தனை சிறந்த செம்மொழியாக இருந்தாலும் நாளடைவில் அழிந்து போய் விடும்.
புத்தர் பேசிய ‘பாலி மொழி’ இயேசுநாதர் பேசிய ‘ ஹீப்ரூ’ மொழி அழிந்து போனதற்கான இவையே காரணம் என்று வரலாற்று மொழியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதம் ஒரு தாய்மொழி அழிந்து வரும் நிலையில், இந்த உலக தாய் மொழி தினத்தில், தாய்மொழியில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தபோதும், தாயின் மார்போடு ஒட்டிக்கொள்வதுபோல, தாய்மொழியைப் பற்றிக் கொள்ள வேண்டும். அது மட்டுமே தன்னை உயிரோடு வைத்திருக்கும்” என்று மகாத்மா காந்தி சொன்னது போல் தாய்மொழியைப் போற்றி வாழ்வோம்.