தஞ்சையில் முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பையை கொட்டிய மாநகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் செயல்பட்டு வரும் வணிக வளாகம் ஒன்று பல ஆண்டுகளாக வரி கட்டாமல் 42 லட்சம் ரூபாயை பாக்கி வைத்துள்ளது. வரி நிலுவையை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஊழியர்கள் வலியுறுத்தியும் வணிக வளாக உரிமையாளர்கள் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.
இதனையடுத்து வணிக வளாகத்தின் ஒரு வாசலில் குப்பை வண்டியை குறுக்கே நிறுத்திய அதிகாரிகள், மற்றொரு வாசலில் குப்பையை கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் வணிக வளாகத்திற்குள் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனைத்தொடர்ந்து வணிக வளாக ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கி, மீதமுள்ள வரி நிலுவையை விரைவில் செலுத்துவதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். இதனையடுத்து வணிக வளாகம் முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பையை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.