18 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகை கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வுத் துறை தொடங்கி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம பூமியை கண்டறியும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கர்ம பூமி எனப் பக்தர்களால் போற்றப் படுகிறது. துவாரகை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்து, ஆட்சி செய்த நகரமாகும். துவாரகை நகரம், கிட்டதட்ட 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். மகிழ்ச்சியான தேசத்தின் தலைநகராக துவாரகை விளங்கியது.
துவாரகை நகரில் துவாரகாதீஷ் எனப்படும் ஜகத் மந்திர், குஜராத்தில் உள்ள கோமதி நதியின் கரையில் அமைந்துள்ளது. இது முக்தி தரும் ஏழு திருத் தலங்களில் ஒன்றாகும். மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் 2200 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் வஜ்ரனபா என்பவரால் கட்டப்பட்டதாகும். கடலில் இருந்து பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் மீட்கப்பட்டு, நிலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக தலபுராணம் தெரிவிக்கிறது.
தாய் மாமனான கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு, துவாரகையின் மன்னனாக முடி சூடிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், வைகுந்தம் திரும்புவதாக முடிவு செய்யும் வரை, துவாரகை நகரிலேயே ஆட்சி செய்ததாக புராண இதிகாசங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்கும் மேல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையை ஆட்சி செய்துள்ளார். துவாரகையில்தான் ருக்மணி தேவி-ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் நடந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும், அந்த நகரமே கடலில் மூழ்கியதாக வரலாறு கூறுகிறது.
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், துவாரகாதீஷ் கோயிலுக்குச் சென்ற பிரதமர் மோடி, கடலில் மூழ்கிய துவாரகைக்கு, ஸ்கூபா கியர் அணிந்து, நீருக்கடியில் சென்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணணை பிரார்த்தனை செய்தார். மேலும், நீருக்கடியில் இருக்கும் தனது படங்களையும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
ஆழ்கடலுக்குள் சென்று பண்டைய துவாரகா நகரத்தை ‘தரிசனம்’ செய்ததாகவும், உலகின் உச்சியைப் போல உயரமானதாக இருக்கும், இந்த நகரத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே கட்டியதாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
துவாரகையின் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஆய்வுகள், 1930-களில் ஹிரானந்த் சாஸ்திரியால் தொடங்கி வைக்கப் பட்டது. தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு, ஜே.எம். நானாவதி மற்றும் எச்.டி. சங்கலியா தலைமையில் முதல் பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் நடைபெற்றது.
1980-களில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில், கோமதி நதிக்கரையில் கோட்டைச் சுவரின் இடிபாடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டன. ஸ்ரீ கிருஷ்ணரின் துவாரகை, நன்கு திட்டமிடப்பட்ட நகரம் என்பதை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
1983 முதல் 1990ம் ஆண்டுகளுக்கு இடையில், துவாரகையின் பல்வேறு ரகசியங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். வலிமை மிக்க அடித்தளம், கல் தொகுதிகள், தூண்கள், கல் நங்கூரங்கள் மற்றும் நீர்ப்பாசன ஓடைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மீது தான் துவாரகையின் பண்டைய நகர சுவர்கள் இருந்திருக்கலாம் என்று யுனெஸ்கோவும் தெரிவித்துள்ளது.
துவாரகையில் கிடைத்த தொல்பொருள் சான்றுகள், கிமு 1500-ம் ஆண்டு தேதியிட்ட இரண்டு செயற்கைக்கோள் நகரங்களுடன் ஒரு நகர-மாநிலம் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்துள்ளார்.
துவாரகை தீவின் கடற்கரை மற்றும் கடல்சார் ஆய்வுகள், வரலாற்றுக்கு முந்தைய காலமான கி.மு. 2000 முதல் நவீன காலம் வரை ஒரு நீண்ட கலாச்சார தொடர் வரிசையை நிரூபித்துள்ளன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏ.எஸ். கவுர் மற்றும் எஸ். திரிபாதி தம் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
துவாரகா என்றால் சமஸ்கிருத மொழியில் ‘வாயில்’ என்று பொருள். இந்தியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் இடையிலான ஒரு முக்கியமான வர்த்தக மையமாக துவாரகை செயல்பட்டுள்ளது.
அனைத்து கடல் தொல்பொருள் ஆராய்ச்சிகளும் துவாரகை ஒரு வர்த்தக மையமாக அமைந்திருந்ததை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளன.
கடைசியாக, 2005 மற்றும் 2007 க்கு இடையில் தான் துவாரகை மற்றும் ஓகா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
18 ஆண்டுகளுக்குப் பின், தொல்பொருள் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் அலோக் திரிபாதி தலைமையிலான ஐந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, துவாரகை கடற்கரையில் நீருக்கடியில் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.
HK நாயக், டாக்டர் அபராஜிதா சர்மா, திருமதி பூனம் விந்த் மற்றும் ராஜ்குமாரி பார்பினா ஆகியோர் அடங்கிய குழு, ஆரம்ப ஆய்வுகளுக்காக, கோமதிகடற்கரைப் பகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
1980 களில் இருந்து கடல்சார் ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் Underwater Archaeology Wing, நீருக்கடியில் தொல்பொருள் பிரிவின் ஒரு பகுதியே. துவாரகை ஆய்வை தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே, 2001 ஆம் ஆண்டு, லட்சத்தீவு,மகாபலிபுரம், மணிப்பூரில் உள்ள லோக்தக் ஏரி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள எலிஃபண்டா தீவு போன்ற இடங்களை ஆய்வு செய்துள்ளது.
நீருக்கடியில் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க இந்திய கடற்படை மற்றும் பிற தேசிய அமைப்புகளுடன் இணைந்து இந்த துவாரகை ஆய்வு நடைபெறுகிறது.