கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் இருந்து கோடநாடு முகாமிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட யானை உயிரிழந்தது.
அதிரப்பள்ளி வனப்பகுதியில் நெற்றியில் காயத்துடன் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட வனத்துறையினர் சிகிச்சை அளிப்பதற்காக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விடுவித்தனர்.
பின்னர் காயம் ஆறாமால் சுற்றித் திரிந்த யானையை மேல் சிகிச்சைக்காக கோடநாடு வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர். அதைத் தொடர்ந்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். அப்போது மயங்கி விழும் நிலையில் இருந்த யானையை மற்றொரு யானை தாங்கி பிடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் யானை அங்கிருந்து கோடநாட்டில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையமான அபயாரண்யத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தபோதிலும் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.