கோவிட் -19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக உலகம் மீளவில்லை. இந்நிலையில், மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வௌவால் வைரஸை சீன விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இது உலக நாடுகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றிய கொரொனா வைரஸ், உலகமெங்கும் பரவி, பல லட்சம் பேர் மனித உயிர்களைப் பறித்தது. இன்னும் முழுமையாக கொரொனா பாதிப்பிலிருந்து உலகம் மீளவில்லை.
இந்த மாதம் வரை, உலக அளவில் 7,087,718 பேர் கொரொனா வைரஸ் காரணமாக இருந்துள்ளனர். இதனாலேயே, உலக வரலாற்றில், ஐந்தாவது-கொடிய தொற்றுநோயாக கொரொனா குறிப்பிடப் படுகிறது.
இந்நிலையில், சீனாவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது HKU5-CoV-2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வௌவால்களில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
வௌவால் வைரஸ்கள் பற்றிய ஆராய்ச்சி 1930-களில் தொடங்கியது. ஜோசப் பவன் முதன்முதலில் வௌவால்களில் ரேபிஸ் வைரஸைக் கண்டறிந்தார்.
1994 ஆம் ஆண்டு, குதிரைகள் வழியாக ஹென்ட்ரா வைரஸ் தோன்றியது. மலேசியாவில்,1997 ஆம் ஆண்டு, பன்றிகள் வழியாக நிபா வைரஸ் தோன்றியது. பிறகு, வௌவால்களிலிருந்து SARS தொடர்பான கொரோனா வைரஸ்கள் (SARSr-CoVs) கண்டுபிடிக்கப்பட்டன.
2002 ஆம் ஆண்டு, தெற்கு சீனாவில் SARS-CoV வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு, மத்திய சீனாவில் SARS-CoV-2 வைரஸ் கண்டறியப்பட்டது. வௌவால்களுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான புதிய வைரஸ்கள், 28 பல்வேறு வைரஸ் குடும்பங்களிலிருந்து தோன்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில், சீனாவின் ஷாண்டோங் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Shi Zhengli தலைமையில் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. வௌவால்களிடமிருந்து பரவும் கொரோனா வைரஸ் குறித்து விரிவான ஆய்வு நடத்தியதால், ஷி “BAT WOMAN ” என்று போற்றப் படுகிறார். இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவரது ஆய்வுக் குழுவில், குவாங்சோ அகாடமி ஆஃப் சயின்சஸ், வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். தென்மேற்கு சீனாவில், இதற்கு முன் அறியப்படாத 24 வகையான வௌவால் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
இந்த 24 வகையான வௌவால் வைரஸ்களில் 4 வௌவால் வைரஸ்கள், கொரொனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. இதே போல் கொரொனா வைரஸ்களின் வாழ்வியல் குறித்து நடத்திய ஆய்வில், வெப்ப மண்டலப் பகுதிகளில் இருந்து பல புதிய வைரஸ்கள் தோன்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புதிய வகை கொரோனா வைரஸ் HKU5-CoV-2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வௌவால் வைரஸ் மெர்பெகோவைரஸ் (merbecovirus) குடும்பத்தை சேர்ந்த MERS-CoV துணை வகையைச் சேர்ந்ததாகும். இந்த வௌவால் வைரஸ் ஹாங்காங்கில் இருக்கும் ஜப்பானைச் சேர்ந்த பிபிஸ்ட்ரெல் வகை வௌவால்களில் காணப்பட்டதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கன்றன.
இந்த வௌவால் வைரஸ் மனிதர்களின் சுவாச மற்றும் குடல் உறுப்புக்களைப் பாதிக்கும். இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவிட்-19 வைரஸைப் போல வேகமாக பரவும் திறனுடையது என்பதால் மீண்டும் மிகப் பெரிய கிருமிப் பரவல் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
HKU5-CoV-2 வைரஸை அச்சுறுத்தலாகக் கருத வேண்டிய அவசியம் இல்லை என்றும் Shi Zhengli தலைமையிலான விஞ்ஞானிகள் குழு தெளிவுபடுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸை விடவும், ஆற்றல் குறைந்தது என்று கூறப்பட்டாலும், வௌவால் வைரஸ் பரவல் அபாயத்தை ஏற்படுத்தும் என்று உலகளவில் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.