தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கப்பாதை திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இந்திய ராணுவத்தின் பொறியாளர் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது.
இதனிடையே சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார். அப்போது மீட்பு பணிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.