தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை மாற்றக் கோரி அக்கட்சியின் பல்வேறு மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரையே மாற்றக் கோரியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 5 ஆண்டுகளாக மேலாக பணியாற்றி வந்த கே எஸ் அழகிரியை மாற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அவருக்கு பதிலாக கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.
தலைவராக நியமிக்கப்பட்டு சரியாக ஓராண்டை கடந்திருக்கும் நிலையில், செல்வபெருந்தகையின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியின் காரணமாகஅவரையும் மாற்ற வேண்டும் என 20க்கும் அதிகமான மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நியமிக்கப்படுவதும் பின்னர் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத் தலைவர்கள் போர்க்கொடி தூக்குவதுமே வாடிக்கை தான் என்றாலும் கூட நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள் எதிர்ப்பு வருவது பல்வேறு விதமான சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்தகையால், முன்னாள் தலைவர் அழகிரி, எம்.பிக்களாக இருந்த செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்தவர்கள் தங்களின் ஆதரவாளர்களோடு இணைந்து செல்வபெருந்தகைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள மாவட்டத் தலைவர்கள் மட்டுமல்லாது பல சட்டமன்ற உறுப்பினர்களும் செல்வப் பெருந்தகைக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க நியமிக்கப்பட்ட செல்வபெருந்தகையோ திமுகவின் உறுப்பினர் போல நடந்து கொள்வது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொடர்பான விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் எனவும், மூத்த மற்றும் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகலிடம் கலந்து ஆலோசிக்காமல் செயல்படுவதாகவும் செல்வபெருந்தகை மீது புகார் கூறப்படுகிறது.
மாவட்டத் தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் செல்வப் பெருந்தகை மீதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புகார்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், மதுரை, கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான மாவட்ட நிர்வாகிகள் டெல்லியில் உள்ள கட்சித் தலைவர்களிடம் மனுவாக சமர்ப்பித்துள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடாங்கை சந்தித்து அடுக்கடுக்கான புகார்களை கூறிய காங்கிரஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து பிரியங்கா காந்தி மற்றும் வேணுகோபாலையும் சந்தித்து நான்கு பக்க கோரிக்கை மனுவையும் வழங்கியுள்ளனர்.
உரிய நடவடிக்கையை எடுப்பதாக தலைவர்கள் உறுதி அளித்திருக்கும் நிலையில், செல்வபெருந்தகையை மாற்றாமல் தமிழகம் வர மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய செல்வபெருந்தகை புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளார். 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு முதன் முதலாக பட்டியினப் பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
அழகிரிக்கு அடுத்ததாக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்ட போதே, பல கட்சிகள் மாறி வந்தவருக்கு தலைவர் பதவியா என்ற சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது அது டெல்லி வரை சென்றிருக்கிறது.
பொதுவாகவே காங்கிரஸ் கட்சி, தலைவர்கள் கட்சி என அழைக்கப்படுவது உண்டு. தொண்டர்களை விட தலைவர்கள் தான் அக்கட்சியில் அதிகளவு இருப்பார்கள் எனவும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது.
அவ்வாறு தலைவர்கள் நிறைந்த கட்சியில் அடிக்கடி தலைவர்கள் மாற்றப்படுவது அக்கட்சியில் இருக்கும் குறைந்த அளவிலான தொண்டர்களை சோர்வடையச் செய்வதோடு கட்சியின் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத சூழலை தான் ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.