தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன நீர் கொண்டு கொண்டு செல்லும் பணிகள் சுமார் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இதற்காக சுமார் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அங்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால், அவர்களை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எட்டு பேரையும் பத்திரமாக மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு குழுவினர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ராணுவ வீரர்களும் மீட்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்று எட்டு பேரையும் மீட்பதற்கு தேவையான ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.