மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக மக்களின் வளர்ச்சிக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி சமூக நலனோடு வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதாக என புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தின் நலனுக்காகவும், எளிய மக்களின் கல்விக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், இரும்பு பெண்ணாக நின்று, கடுமையான அரசியல் சூழ்நிலைகளை துரும்பு என்று சமாளித்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியுள்ளார். அரசியல் பணி கடுமை என தெரிந்தும், மனதில் கரும்பு என்று நிரூபித்து, கட்சி எல்லை கடந்து பெண்கள் விரும்பும் தலைவியாக வலம் வந்த ஜெயலலிதாவை நினைவு கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.