கரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனையளிப்பதாகவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒழுக்கநெறி சார்ந்த பயிற்சி வகுப்புகள் தேவைப்படுவதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துவதாக கூறியுள்ளார்.
சட்டம் – ஒழுங்கையும், பெண்களின் பாதுகாப்பையும் இரும்பு கரங்களுக்குள் வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வரும் பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கும், இந்த சமுதாயத்திற்கும் எந்த வகையில் ஆறுதல் சொல்ல காத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது துறையில் தினமும் நடக்கும் குற்றங்களை பற்றிய அக்கறை இல்லாமல், புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக சமூக வலைதளங்களில் களமாடி வருவது வேதனையின் உச்சம் என கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.