கடலூரில் அடுத்தடுத்து காணாமல்போன இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதிகளைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இளைஞர்கள் அண்மையில் அடுத்தடுத்து மாயமாகினர். இது தொடர்பான புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இருவரும் நெய்வேலி என்எல்சி அருகேயுள்ள மண்மேடு பகுதியில் கொன்று புதைக்கப்பட்டிருப்பதும், நண்பர்களே அவர்களை கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து இரு இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.