தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. திமுக அரசு மீது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதிருப்தியை திசை திருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதன் மூலம் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39 லிருந்து 31 ஆக குறையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அதோடு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் வகையில் வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு இதுவரை எந்த வித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தமிழக அரசு தாமாக முன்வந்து இந்த பிரச்னையை கிளப்பியிருப்பதன் பின்னணியில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் என சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தலைநகரத்தில் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை அனைத்து பகுதிகளிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுவதும் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், நிறைவேற்றாமல் இருப்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால், அரசுப்பணி கனவில் இரவு பகலாக தயராகிக் கொண்டிருக்கும் இளைஞர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியாக ஒட்டுமொத்த சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் மற்றும் தமிழகத்தில் எழுந்திருக்கும் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் திசை திருப்பி மக்களை குழப்பவே தற்போது தொகுதி மறுசீரமைப்பு எனும் பிரச்னையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், தற்போது இந்த பிரச்னையை பெரிது படுத்துவதற்கும் பின்னணியில் இந்த காரணங்களே அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை மற்றும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் விவகாரத்தில் மத்திய அரசின் மீது முழு பழியை போட்டு மக்களை குழப்பும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தையும் ஊதிப் பெரிதாக்கி மத்திய அரசுக்கு எதிராக மக்களை தயார்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதற்கிடையே, பாராளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யும் போது, தென்மாநிலங்கள் உட்பட அனைவருக்கும் சாதகமாகவே இருக்கும் என தெரிவித்த பின்னரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்த பயத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கற்பனையான பயங்களும், முட்டாள் தனமான வாதங்களுமே தமிழக முதல்வரின் ஒரே செயல்பாடாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் தமிழக அரசு, இதற்கு முன்பு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளால் ஒரு பயனும் கிடைத்ததில்லை எனவும், அதை போலவே அனைத்துக் கட்சி கூட்டம் என்பது மக்களையும், கூட்டணிக் கட்சிகளையும் ஏமாற்றும் செயலே என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.