நெல்லை சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய இடங்களில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் அறுவடைக்கு தற்போது தயாராக உள்ளது.
ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு மூட்டை நெல் ஆயிரத்து 600க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்து 400க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
எனவே, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், பத்தமடை பகுதிகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .