கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
பாஜக அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் ஈஷா யோகாவில் நடைபெறும் சிவராத்திரி உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கோவை வந்தார்.
இந்நிலையில், இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்ற பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
12 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதியதாக மாநகர் மாவட்ட பாஜக அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த பிரமாண்ட கட்டடத்தில் மொத்தம் 15 அறைகள் அமைந்துள்ளன. இதில் 400 பேர் அமரும் வகையிலான அடல் அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட பாஜக அலுவலகங்களையும் காணொலி காட்சி வாயிலாக அவர் திறந்து வைத்தார்.
விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.