மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திடீரென தலைமுடி கொ ட்டி வழக்கை விழுந்ததற்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட கோதுமையே காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் பலருக்கு திடீரென முடிஉதிர்வு பிரச்னை ஏற்பட்டது. தலைவலி, காய்ச்சல், உச்சந்தலையில் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, வழக்கை விழத் தொடங்கியது.
புல்தானா மாவட்டத்தில் உள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த 279 பேர் வழுக்கை தலை பிரச்னையால் பாதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு, மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொண்டது.
அதில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து உள்ளூர் ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட்ட கோதுமையே முடிஉதிர்வு பிரச்னைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் விநியோகிக்கப்பட்ட கோதுமையில் செலினியத்தின் அளவு 600 மடங்கு வரை அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு மிக குறைந்த அளவில் தேவைப்படும் செலினியத்தின் அளவு, உணவு மூலம் பன்மடங்கு அதிகரித்ததால் திடீர் வழுக்கை பிரச்னை ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.