தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது 2024 ஆம் ஆண்டில், ஒடிசாவில் முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசாங்கத்தை அமைத்ததாக தெரிவித்தார்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில் NDA அரசாங்கம் அமைந்துள்ளதாகவும், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
திமுக தலைமையிலான ஊழல் மற்றும் தேசவிரோத அரசாங்கத்தை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். வகுப்பு வாதம், பிரிவு வாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவருடைய முத்திரையை பதித்துக் வருவதாகவும், ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றத்தில் மூவேந்தர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட செங்கோலை நிறுவிய பெருமை பிரதமரையே சேரும் என்றும் அவர் கூறினார்
மற்ற இந்திய மாநிலங்களை விட தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேங்கை வயல், பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை அவர் சுடடிக்காட்டினார்.
1998 இல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பான சூழல் உள்ளதாகவும், தமிழகத்தில் கனிம வள கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்துகொண்டு வருவதகாவும் அவர் கூறினார்.
ஊழல் பெருச்சாளிகளை திமுக தேடி தேடி கட்சியில் சேர்ப்பதாகவும், ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காக முதல்வரும், துணை முதல்வரும் புதிய பிரச்னைகளை கையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றும் அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.