மஹா சிவராத்திரியையொட்டி தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். முன்னதாக ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அமித்ஷா, அங்குள்ள லிங்க பைரவியை மனமுருகி வழிபட்டார். அதைத் தொடர்ந்து திரிசூலத்தில் மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்தணை மேற்கொண்டார்.
தொடர்ந்து யோகா மையத்தை முழுமையாக சுற்றிப்பார்த்த அமித்ஷா, யோகேஸ்வர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
பின்னர் சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பக்தர்கள் முன் உரையாற்றிய அமித்ஷா, இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பிராயாக்ராஜ்ஜில் மஹா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தேசம் முழுவதும் சிவமயமாக காட்சியளிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பக்திக்கான திருநாளாக சிவராத்திரி விழா திகழ்வதாக கூறிய அவர், பக்தியின் வெளிப்பாடே மகா சிவராத்திரி எனத் தெரிவித்தார். மேலும் சத்குரு, தர்மத்தின் மேன்மையை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் அமித்ஷா கூறினார்.
இந்த மகாசிவராத்திரி கொண்டாட்டம் அற்புதமானது, கற்பனை செய்ய முடியாதது மற்றும் விவரிக்க முடியாதது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், தியானமும் சாதனாவும் மூடநம்பிக்கைகள் அல்ல, அவை முற்றிலும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டவை என்பதை சத்குரு ஜக்கி வாசுதேவ் நிரூபித்துள்ளதாகவும் அவர் கூறினார் சத்குரு ஜக்கி வாசுதேவ், சிவம் நித்தியமானது மற்றும் உணர்வு என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார் எனறும், அதுதான் ‘சிவத்வத்தை’ எழுப்புவதற்கான ஒரே வழி எனறும் அமித் ஷா குறிப்பிட்டார்.