மதுரை வண்டியூர் கண்மாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டியூர் கண்மாயை ஒட்டிய பல ஏக்கர் நிலங்களை 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து வைத்திருந்த தனி நபர்கள், நிலங்களுக்கு உரிமைகோரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்கள் பெயர்களில் பட்டா பெற உத்தரவு பெற்றனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, பட்டா பெற்ற நபர்கள் அந்த நிலங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.
அதனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன், சம்மந்தப்பட்ட இடம் நீர்நிலை புறம்போக்கு நிலம் என்பதை சுட்டிக்காட்டி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.
ஆவணங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் அந்த இடங்களை மீண்டும் சுவாதீனம் செய்து கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள்,
நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு உண்டான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திறமையாக வாதிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.