மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகங்களை பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசத்தனர். விண்ணை பிளந்து ஒலித்த சிவ சிவ கோஷத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரியை ஒட்டி திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர், அகிலாண்டேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சிவபெருமான் நாகராஜனுக்கு காட்சி கொடுத்த ஸ்தலமாக விளங்க கூடிய, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாகநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழாவை ஒட்டி கலைநிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவை அன்னூர் மண்ணீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை ஒட்டி சிவபெருமானை வழிபட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அருந்தவ செல்வி தாயாருடன் மண்ணீஸ்வரர் அருள் பாலித்த நிலையில் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.
நெல்லை அயன்சிங்கம்பட்டி சங்கிலி பூதத்தார் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவில் பக்தர்கள், சாமி ஆடி வழிபட்டனர். ஆண்டுந்தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று மட்டும் 3 நாட்களுக்கு இத்திருக்கோயிலில் திருவிழா நடைபெறும். இந்நிலையில் மஹா சிவராத்திரியையொட்டி வீதிகளில் சங்கிலி எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வீடுகளுக்கு முன்பு நின்ற பெண் பக்தர்கள் சாமியாடி வழிபட்டனர்.