இந்தியாவில் ஐந்து பேரில் மூன்று பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளார். உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆன்லைன் தரவுத்தளமான GLOBO-CAN (குளோபோகன்) உலகமெங்கும் உள்ள புற்றுநோய் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை, (( the lancet regional health – southeast asia ‘)) தி லான்செட் பிராந்திய – தென்கிழக்கு ஆசியா’ இதழில் ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
2000ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 62 ஆண்டுகளாக இருந்தது. 2024 ஆம் ஆண்டில், 9 சதவீதம் அதிகரித்து, இப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 68 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. ஒருகாலத்தில், இந்தியாவில் பெரும்பான்மையான இறப்புகளுக்கு தொற்று நோய்களே ஒரு காரணமாக அமைந்திருந்தது.
ஆனால், சமீப ஆண்டுகளாக, இதய நோய், நீரிழிவு நோய்,பக்கவாத நோய் மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் இந்தியாவில் பெரும் பொது சுகாதாரப் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில், புற்றுநோய் பாதிப்பு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதாவது, 2012 ஆம் ஆண்டில், 50 லட்சம் மக்களுக்கும் மேல் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். ஆனால் 2022 ஆம் ஆண்டில், புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக உயர்ந்துள்ளது.
உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் தொடர்பான மரணங்கள் 65 சதவீதமாக உள்ளது. புற்று நோய் பாதிக்கப்பட்ட ஐந்து இந்தியர்களில் மூன்று பேர் இறக்கின்றனர்.
அமெரிக்காவில் நான்கு பேரில் ஒருவரும் மற்றும் சீனாவில் இரண்டு பேரில் ஒருவரும் புற்று நோயால் இறக்கின்றனர். சீனா மற்றும் அமெரிக்காவில் புற்றுநோயால் இறப்பவர்கள் சதவீதம் முறையே 50 மற்றும் 23 ஆக உள்ளது.
14 வயது வரையிலான குழந்தைகளுக்கும், இனப்பெருக்க வயதுடைய நபர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகப்பட்சம் 2.3 சதவீதமாக உள்ளது. அதில், புற்றுநோயால் இறப்பதற்கான வாய்ப்பு அதிக பட்சம் 1.3 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படுகிறது.
மேலும், நடுத்தர வயது மற்றும் முதியோர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிக பட்சம் 10.3 சதவீதமாகவும் அதில், புற்றுநோயால், இறப்பதற்கான வாய்ப்பு அதிக பட்சம் 7.6 சதவீதமாக உள்ளது.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே அதிகளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், புற்றுநோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 64.2 சதவீதமாக உள்ளது. ஆண்கள் வாய் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சுமார் 30 சதவீத பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அதில் 24 சதவீத பெண்கள் புற்றுநோயால் மரணம் அடைகின்றனர். இதற்கு அடுத்த படியாக, பெண்களுக்கு அதிக அளவில், கர்ப்பப்பை மற்றும் வாய் புற்று நோய் ஏற்படுகின்றது.
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடுத்தர வயது மற்றும் முதியவர்களிடையே புற்றுநோய் அதிகரிக்கும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வரும் ஆண்டுகளில், புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் ICMR எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து இந்திய மக்களைக் காப்பாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர நடவடிக்கைள் எடுத்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், நாட்டின் 759 மாவட்டங்களிலும் பகல்நேர புற்றுநோய் மையங்களைத் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த மையங்களில், கீமோதெரபி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பயாப்ஸி பரிசோதனை போன்ற மருத்துவச் சேவைகள் வழங்கப்படும்.
மேலும், ஆபத்தான நிலையில் உள்ள புற்று நோயாளிகளுக்கு உரிய பரிசோதனைகள் செய்யவும், இந்த மையங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.