நத்தம் அருகே சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை மாடு பலமாக தாக்கியது.
மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடலூரில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றுள்ளார். ந.புதுக்கோட்டை அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்ற மாட்டின் மீது கார் மோதியுள்ளது.
இதில், காட்டுமாடு குடல் சரிந்து படுகாயமடைந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், காட்டுமாடுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர் பழினிசாமியை வரவழைத்துள்ளனர்.
மயக்க நிலையில் இருந்த காட்டுமாடுக்கு சிகிச்சை அளித்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் எழுந்த மாடு கால்நடை மருத்துவரை தாக்கியுள்ளது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கால்நடை மருத்துவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கார் விபத்தில் படுகாயமடைந்த மாடு உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.