பாரத அரசியலில் நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் பலர் வாழ்ந்தனர். அவர்களில் முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குறிப்பிடத்தக்கவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29ம் தேதிதான் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாளாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கீதையையே தன் பாதையாக கொண்டு வாழ்ந்த அந்த மாமனிதர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1896ம் ஆண்டு, பிப்ரவரி 29ம் தேதி, குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் உள்ள பதேலி கிராமத்தில், ரஞ்சோத்ஜி மற்றும் வஜியாபென் தம்பதியருக்கு மகனாக மொரார்ஜி தேசாய் பிறந்தார். பள்ளி ஆசிரியரான தனது தந்தையிடமிருந்து, எந்தச் சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருப்பதையும் கடின உழைப்பையும் மொரார்ஜி தேசாய் கற்றுக் கொண்டார்.
பண்பாடு மிக்க சூழலில், கணிதம் மற்றும் இயற்பியலில் பல்கலைக்கழக பட்டம் பெற்றார். 1918ம் ஆண்டு, மும்பை மாகாணத்தில் நிர்வாகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். அதன் பின், 12 ஆண்டு காலம் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார்.
மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, தனது வேலையை ராஜினாமா செய்தார். குடும்பநலனை விட தேசநலமே முக்கியம் என்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கைதாகி, 5 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றார்.
1931-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார்.1937-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பம்பாய் மாகாண தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது விவசாயம் மற்றும் கூட்டுறவு வருவாய் துறை அமைச்சராக பணிபுரிந்தார்.
1946 ஆம் ஆண்டு தேர்தலில் பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மொரார்ஜி தேசாய் உள்துறை அமைச்சர் ஆனார். விடுதலைக்குப் பின் 1952ம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் முதலமைச்சரானார் மொரார்ஜி தேசாய்.
பம்பாயின் முதலமைச்சராக இருந்தபோது மதுவிலக்கை அறிமுகப்படுத்தினார். திரைப்படங்களில் முத்தக் காட்சிகளைத் தடை செய்தார். நள்ளிரவில் உணவகங்களை மூட உத்தரவிட்டார். பின்னர் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது தங்கக் கட்டுப்பாட்டு உத்தரவைக் கொண்டு வந்தார்.
மகாராஷ்ட்ரா , குஜராத் என்று 2 மாநிலங்களாக பம்பாய் மாகாணம், பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மொரார்ஜி தேசாய்.
1975-ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனபடுத்தியபோது மொரார்ஜி கைது செய்யப்பட்டு ரகசியகாவலில் வைக்கப்பட்டார். நெருக்கடி நிலை காலத்தில் 19 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.
தொடர்ந்து நடந்த பொது தேர்தலில், தனது தலைமையில் ஜனதா கட்சி கூட்டணியை அமைத்தார். குஜராத்தின் சூரத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மொரார்ஜி தேசாய் 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி பாரதப் பிரதமராக பதவி ஏற்றார். இதன் மூலம், காங்கிரஸ் அல்லாத முதல் பாரதப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
தான் பிரதமராக இருந்தபோது பூரண மதுவிலக்கை கொண்டு வந்தார். தங்கத்தின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தார். கதர் மற்றும் கைத்தறி தொழிலுக்கு மறுவாழ்வு கொடுத்தார்.
ஜனதா சாப்பாடு திட்டம் என்ற சாப்பாட்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது தான் ஜனதா சாப்பாடு. இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே உணவகம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், வரதட்சணையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மொரார்ஜி தேசாயின் பொருளாதார மேலாண்மை கொள்கைகளே, பிற்காலத்தில், பொருளாதார தாராளமயமாக்கலுக்கு அடித்தளமாக இருந்தது.
ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக, பிரதமராக பதவியேற்று 28 மாதங்களில் ராஜினாமா செய்தார். முன்னதாக, எட்டு முழுமையான நிதிநிலை அறிக்கைகளையும், இரண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கைகளையும் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார் மொரார்ஜி தேசாய்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஒருபோதும் தீவிர அரசியலை நோக்கி மொரார்ஜி தேசாய் திரும்பிப் பார்க்கவில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்த தேசாய் 1995 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 ஆம் தேதி தனது 99வது காலமானார். அவரது சமாதி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
1986 ஆம் ஆண்டு, பாகிஸ்தான் தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான நிஷான்-இ-பாகிஸ்தான் விருதை வழங்கி மொரார்ஜி தேசாயை கௌரவித்தது. 1991ம் ஆண்டு, மத்திய அரசு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பித்தது.
பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் மிக உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமை மொரார்ஜி தேசாய்க்கு மட்டுமே உண்டு.
மொரார்ஜி தேசாய் வாழ்க்கையை ஸ்தித்பிரக்ஞா என்று சொல்லலாம். அவர் எல்லாவற்றிலும் ஈடுபட்டார், ஆனால் எதிலும் சலனம் இல்லாமல், அமைதியாக இருந்தார்.
நெஞ்சில் உரமும், நேர்மைதிறமும் உடைய மொரார்ஜி தேசாய், வாழ்க்கையில் ஒருவர் எந்த சூழலிலும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்பட வேண்டும் என்ற கொள்கையை கடைசி வரை கடைபிடித்தார்.