மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், பாகிஸ்தானுக்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஐநா மனித உரிமைகள் ஆணையம் உலகில் மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பாகும். இதில், 47 உறுப்பு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆணையம், ஆண்டுதோறும் குறைந்தது மூன்று முறை ஜெனீவாவில் கூடுகிறது. சர்வதேச நாடுகளில், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், ஐநா மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வியாழக்கிழமை, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது அமர்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான், இந்தியா மீது அடுக்கடுக்கான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்தது. இதற்கு இந்தியா தக்க பதிலடியைக் கொடுத்துள்ளது.
பாகிஸ்தானின் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசாம் நசீர் டரார், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், காஷ்மீர் மக்களின் முடிவெடுக்கும் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
பாகிஸ்தானின் போலியான குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டியுள்ளது என்று தனது பதிலுரையைத் தொடங்கிய இந்திய தூதர் (Kshitij Tyagi) க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியைக் கொடுத்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் தலைவர்கள், பாகிஸ்தானின் சார்புநிலை கொண்ட மற்ற தலைவர்கள், பாகிஸ்தானின் அதிகாரிகள் மற்றும் ராணுவ-பயங்கரவாதிகளும் எழுதி கொடுக்கும் பொய்களைப் பரப்புவது வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
“இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) ஊதுகுழலாக இருக்கும் பாகிஸ்தான் ஒரு தோல்வியுற்ற நாடாகும் அரசியல் ஸ்திரமற்ற, பொருளாதார ஸ்திரமற்ற நிலையில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கிறது. சர்வதேச நாடுகளில் கையேந்தும் நிலையில் உள்ள பாகிஸ்தானில் தான் திறமையற்ற ஆட்சி நடக்கிறது. அதன் காரணமாகவே அந்நாட்டில், அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன.
சிறுபான்மையினரை துன்புறுத்துவது, ஜனநாயகத்திற்கு இடம்தராதது, ஐ.நா.வால் பட்டியலிடப் பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது ஆகியவற்றையே அரசு கொள்கைகளாக கொண்ட ஒரு நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்நிலையில், ஜனநாயகத்தில் உயர்ந்து விளங்கும் இந்தியாவிடம் பாகிஸ்தான் பாடம் கற்று கொள்ள வேண்டுமே ஒழிய, இந்தியாவுக்குப் பாடம் எடுக்க கூடாது என்றும், இந்திய தூதர் தியாகி எச்சரித்தார்.
உள்நாட்டு நெருக்கடிகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப சர்வதேச தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய தியாகி, இந்தியா மீதான ஆரோக்கியமற்ற வெறிக்குப் பதிலாக, தனது சொந்த மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டையே தியாகியின் கருத்துக்கள் பிரதிபலித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான பர்வதனேனி ஹரிஷ், ஐ.நா. பாதுகாப்பு சபையில், ஏற்கெனவே, ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்து வருகின்றன என்றும், எப்போதும் இருக்கும் என்றும் , ஜம்மு காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும் , தேவையில்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைப்பதையும் பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவது, சர்வதேச நாடுகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.