உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நிறைவடைந்த உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நீராடியுள்ளனர். மகா கும்ப மேளாவில், கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரயாக் ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் இணையும் இடத்தில் இந்த ஆண்டு மகா கும்ப மேளா வெகுசிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
மனிதக்குலத்தின் ‘மகா யாகம்’, நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சமத்துவத்தின் மாபெரும் திருவிழா மற்றும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சிறப்பான காலமான மகா கும்ப மேளா வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டுள்ளது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதற்காக, பிரதமர் மோடிக்கு முதல் நன்றி என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 140 கோடியாகும். இந்நிலையில், இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல், 65 கோடிக்கும் மேலான பக்தர்கள்,மகா கும்பமேளாவில்,புனித நீராடியுள்ளனர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு,பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா,உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள், முன்னணி தொழிலதிபர்கள் என கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். மகா கும்ப மேளா நிறைவு நாளில் மட்டும், சுமார் 81 லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
அமெரிக்கா, கொலம்பியா, சிலி, இத்தாலி,ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்ச்சுகல்,ரஷ்யா,ஆஸ்திரியா மெக்சிகோ,நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர், மகா கும்ப மேளாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, 118 பேர் கொண்ட வெளிநாட்டுக் குழு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது. இதில் அயல்நாட்டு தூதர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகா கும்பமேளாவின் தூய்மை, பாதுகாப்பு வியக்க வைத்ததாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதரின் மனைவி டயானா அலிபோவா தெரிவித்திருந்தார். திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் ஆன்மீகத்தில் மூழ்கியிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு விசித்திரமான சக்தி இருப்பதாக உணர்ந்ததாக கொலம்பியாவின் தூதர் விக்டர் ஹ்யூகோ எச்செவேரி ஜராமில்லோ குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த லாலி, பக்தர்களின் கூட்டத்தின் மத்தியில் தான் எப்படி முற்றிலும் சௌகரியமாக உணர்ந்தாகவும், கற்பனை செய்து வைத்திருந்த எதையும் விட மகா கும்ப மேளா அனுபவம் சிறப்பாக இருந்தததாகவும் கூறியுள்ளார்.
ஸ்பெயின், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் மகா கும்ப மேளாவுக்கு வந்த ஸ்பெயின் பக்தரான ஜோஸ், புனித நீராடியதாகவும், தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்ததாகவும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த அவிகெயில் என்ற பக்தர், மகா கும்ப மேளா, வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் அனுபவம் என்றும், பாரத மக்களையும், பாரத பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மகா கும்ப மேளாவில் கலந்து கொள்ள ரஷ்யாவில் இருந்து வந்திருந்த கிறிஸ்டின், உண்மையான இந்தியாவையும், இந்தியாவின் உண்மையான சக்தியையும் திரிவேணி சங்கமத்தில் தான் பார்த்தாக தெரிவித்துள்ளார். மேலும், திரிவேணி சங்கமத்தில், தமக்கு ஏற்பட்ட தெய்வீக அனுபவம் விளக்கிச் சொல்ல முடியாதததாக இருக்கிறது என்றும், இந்துக்களின் ஆன்மீக உணர்வை கண்டு ஆச்சரியப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஒற்றுமையின் அடையாளமாக மகா கும்ப மேளா இருந்தது என்று கூறியுள்ள மெக்சிகோவைச் சேர்ந்த அனா, எல்லோரையும் எல்லாவற்றையும் அன்போடும், பக்தியோடும் கொண்டாடும் இந்தியர்கள் அந்நியர்களிடம் கருணையுடன் பழகுகிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார். மேலும், பிரயாக்ராஜில் இருப்பது புனிதமானது என்றும், தெய்வீகமானது என்றும் கூறியுள்ள அனா, இப்போது தான் பாக்கியசாலியாக உணர்வதாக தனது மகா கும்ப மேளா அனுபவத்தை கூறியுள்ளார்.
உலகத்தின் மிக பண்டைய நாகரிகமான பாரதம்,ஒரு ஞானபூமியாகும். பண்பட்ட சிந்தனைகளின் பிறப்பிடமாக விளங்கும் இந்தியாவின் அடையாளமாக மகா கும்ப மேளா சிறப்பாக நடந்து முடித்துள்ளது. வசுதைவ குடும்பகம் என்ற செய்தியை உலகின் அனைத்து மூலைகளுக்கும் எடுத்துச் மகா கும்ப மேளா கொண்டு சேர்த்திருக்கிறது.