பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி அன்று நிறைவு பெற்றது. மொத்தம் 45 நாட்கள் நடைபெற்ற இந்த மகா கும்பமேளாவில் இதுவரை இல்லாத அளவில் 66 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இன்னும் 4 கும்பமேளாக்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் உள்ள திரிம்பகேஸ்வரில் கும்பமேளா நிகழ்வு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி தொடங்கும் கும்பமேளா நிகழ்வு ஆகஸ்டு 17-ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.