ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அதிபர் டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் வாஷிங்டனில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து இங்கிலாந்து பிரதமருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
போரை முடிவுக்கு கொண்டுவரும் செயல்முறையை தொடங்க, உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியதாக கூறினார்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக கூறிய அவர், என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் அளித்த உதவிகளில் பெரும்பாலானவை கடன்களின் வடிவத்தில் உள்ளதாகவும், பைடன் நிர்வாகத்தின் கீழ் அனுப்பப்பட்ட 350 பில்லியன் வரையிலான பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்பில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.