தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அடுத்த பஞ்சதாங்கி மலையடிவார பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு விவசாய தோட்டங்களில் நண்பர்களான மணி மற்றும் கருப்பையா ஆகியோர் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த கிடந்தனர்.
உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விவசாயிகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் எச்சரித்தனர்.
இதனிடையே உயிரிழந்த விவசாயி மணியின் மகன் ராணுவ வீரராக உள்ள நிலையில் ஒரு ராணுவ வீரரின் தந்தை மரணத்திலேயே காவல்துறை அலட்சியமாக இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளனர்.