சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் தூய்மைப்படுத்தி பராமரிக்கும் பணிக்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் வசம் வழங்க மாமன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு 430 கோடி ரூபாய் மதிப்பில் கழிப்பறைகளை பராமரிக்க தனியாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் மீண்டும் அதே தனியார் வசமே அப்பணிகளை ஒப்படைப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மாநகராட்சி வசம் இருந்த கழிப்பறைகளை ஒருமுறை தூய்மைப்படுத்துவதற்கு 3 ரூபாய் செலவான நிலையில், அடுத்த எட்டு மாதங்களில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஒருமுறை தூய்மைப்படுத்துவதற்கான செலவு 363 ரூபாயாக, அதாவது முன்பை விட 115 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
பெரும் வணிக நிறுவனங்களே கழிப்பறைகளை ஒருமுறை பராமரிக்க நூறு ரூபாய்க்கு மேல் செலவழிக்காத நிலையில், சென்னை மாநகராட்சி ஒதுக்கிய தொகையில் ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
430 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், அதற்கான பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பெரும்பாலான கழிப்பறைகள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருப்பதையும் பார்க்க முடிகிறது.
பெரிய அளவிலான தொகை ஒதுக்கி தனியாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப்பணிகள் தோல்வியை சந்தித்த நிலையிலும், மீண்டும் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் அதே தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு எதிராக மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கால்பந்து திடல், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் என பல்வேறு தனியார் மய நடவடிக்கைகள் கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்ட நிலையில், தற்போது ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக கூறப்படும் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கக் கூடாது என உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி இதுவரை எத்தனை கழிப்பறைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன? அதில் எத்தனை கழிப்பறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றன? கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத கழிப்பறைகள் எத்தனை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கழிப்பறைகள் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களுக்கு உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்ற கேள்விகளும் சென்னை மாநகராட்சியை நோக்கி எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது, முறைப்படி ஒப்பந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், விசாரணையின் அடிப்படையில் தவறு செய்யப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கமளித்துள்ளனர்.