மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை கடற்கரை பகுதிகளில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வந்து முட்டையிடுவது வழக்கம்.
ஆனால், தற்போது, ஆலிவ் ரெட்லி ஆமைகள் திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார், பழையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
காப்பு காடு கடற்கரை பகுதிகளில் இறந்து ஒதுங்கிய ஆமைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை வனத்துறையினர் அப்புறப்படுத்துவதுடன், அரிய வகை ஆமைகள் இறப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.