ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், கைரேகையை சோதனை செய்வதற்காக மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
3வது முறையாக சிறைகாவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 10 மீனவர்களின் குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 10 மீனவர்களின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் சக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.