சிவகங்கை பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட பேருந்து நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கூரை மற்றும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.
புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியில் இருந்து நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், வியாபாரம் ஆகவில்லை எனக்கூறி பேருந்து நிலைய நுழைவுவாயிலில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த நகராட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.