நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்தது.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் வழக்கு தொடர்ந்தார். இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்குள் முடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமான் வீட்டு கதவில் காவல்துறை சம்மன் ஒட்டியது.
இந்த சம்மனை கிழித்த சீமானின் உதவியாளர் மற்றும் போலீசாரை தாக்கிய காவலாளி கைது செய்யப்பட்டனர். மேலும் காவலாளி வைத்திருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், விசாரணைக்காக சீமான் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக சீமான் திட்டமிட்டார். இதனையடுத்து காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே காவல்துறை அராஜக நடவடிக்கையில் ஈடுபடுவதாகக்கூறி நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.