சென்னையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னை கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விமான நிலையத்தின் எல்லைப்பகுதி முடிவடைகிறது. அண்மையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காகவும், அங்குள்ள குடியிருப்புகளின் உயரத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதாகவும்கூறி, அங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளின் உயரங்களை குறைக்க சென்னை விமானத்துறை நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக முதற்கட்டமாக 9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில், விரிவாக்க திட்ட அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அங்குள்ள 5 வீடுகளை அளவீடு செய்ய சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.