கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுடன் மாயமாவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மீனவர்களை மீட்க உயர்தர ட்ரோன் கண்காணிப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம், நாகை மாவட்ட ஆட்சியருடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யாளி ஏரோஸ்பேஸ் நிறுவன சிஇஓ தினேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுத்தப்பட உள்ளதாவும், கடலில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன ட்ரோன் மூலம் கண்காணித்து மீனவர்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.