நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.
குறிப்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை எனக்கூறி, அண்மையில் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில், அப்பகுதியில் தொடர்ந்து கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறி, ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக தங்கள் பகுதி அடி பம்புகளில் வரும் தண்ணீரை பாட்டிலில் பிடித்த அவர்கள், அதனை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று முறையிட்டனர்.
அப்போது தாங்கள் தொடர்ந்து அருந்தி வரும் இந்த தண்ணீரை மாநகராட்சி மேயரோ அல்லது அதிகாரிகளோ குடிக்க முடியுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.