மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
பாராளுமன்றத் தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் ஆதாரமற்ற அச்சம் குறித்து விவாதிக்க, மார்ச் 5, 2005 அன்று திட்டமிடப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக பாஜகவை அழைத்ததற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துக் கூட்டத்திற்கு அழைத்திருந்த உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான கருத்துக்களை இந்தக் கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்
தொகுதி மறுவரையறை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே தொகுதி மறுவரையறை குறித்து மறுவரையறை குறிதது நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் கற்பனையான அச்சங்களைப் பரப்பவும் அது குறித்து வேண்டுமென்றே பொய் சொல்லவும் மட்டுமே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்கள். தனது சமீபத்திய தமிழக வருகையின் போது கூட தொகுதி மறுவரையறையினால் எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாது என்றும், தொகுதி மறுவரையறை என்பது, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.
தொகுதி மறுவரையறைக்கான அறிவிப்பு, தொகுதி மறுவரையறை ஆணையத்தினால் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டபோதும். நீங்கள் பொய்களைப் பரப்பி, பின்னர் அந்தப் பொய்கள் அனைத்தும் உடைத்தெறியப்பட்டதற்குப் பிறகும் நீங்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
“எவ்வளவு மக்கள் தொகையோ அவ்வளவே உரிமைகள்” என்று பொருள்படும் “ஜித்னே அபாதி உத்னி ஹக் என்று திமுக இடம்பெற்றுள்ள இந்தி கூட்டணி பிரச்சாரம் செய்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இந்தி கூட்டணியின் இந்த பிரச்சாரம், தொகுதி மறுவரையறையின்போது, மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தியுள்ள தென்மாநிலங்களை பாதிக்கும் என்று கூறி பதிலடி கொடுத்தார்.
தொகுதி மறுவரையறை காரணமாக தமிழகத்தின் நாடாளுமன்ற இடங்கள் குறையும் என்ற கற்பனையான பயம் உங்களுக்கு முன்னரே இருந்திருந்தால், சமீபத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, உங்கள் 39 இந்தி கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்களவையில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்க முடியும்.
ஆனால், உங்கள் நான்கு ஆண்டுகால நிர்வாகச் சீர்கேட்டினால் பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை எதிர்கொள்ளப் பயந்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, கடந்த ஒரு வாரமாக நீங்கள் பரப்பிய கற்பனையான இந்தித் திணிப்பு நாடகத்தைப் பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், திடீரென்று ஒரு நாள் விழித்தெழுந்து, தொகுதி மறுவரையறை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு திசைதிருப்ப முயற்சித்திருக்கிறீர்கள்.
அரசியலமைப்புச் சட்டப்படி பதவியில் இருக்கும் ஒருவர். உண்மைக்கு மாறாக, நமது மொழியை இழிவு படுத்துவதாகவும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நிதி உதவி வழங்கவில்லை என்றும், எவ்வளவு காலம்தான் பொய்களைப் பரப்ப முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
திமுக, மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருந்தபோதிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் பல அமைச்சர் பதவிகளை வகித்தபோதும், தமிழக எல்லைகளுக்கு அப்பால், நமது தமிழ் மொழியைக் கொண்டு செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறுபுறம், தமிழ் மொழியின் செழுமையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒப்பிட முடியாதவை. அதன் பட்டியல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவாக, அவரது பிறந்த நாளான டிசம்பர் 11 ஆம் தேதி தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கப்பட்டது. மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஒரு தமிழ் இருக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
காசி தமிழ் சங்கமம் 1 இல் திருக்குறள் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. காசி தமிழ் சங்கமம் 2 இல், 46 சங்க கால நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. மேலும் பிரெய்லி முறையில் திருக்குறள் வெளியிடப்பட்டது. மேலும், நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள், திருக்குறளை குறைந்தது 100 மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகரில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டது.
ஒரு ஆங்கிலேய காலனித்துவத்திலிருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகார மாற்றத்தின் அடையாளமாகத் திகழ்ந்து, உங்கள் கூட்டணிக் கட்சியால், அருங்காட்சியகத்தில் கைத்தடியாக ஓரம்கட்டப்பட்ட சோழர்களின் பெருமையான செங்கோல், மீட்டெடுக்கப்பட்டு, இப்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதன் சரியான இடத்தை அடைந்துள்ளது.
முதல் முறையாக, நமது நாட்டின் பிரதமர், ஐ.நா. சபையில் தமிழில் பேசினார். 74வது ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய நமது மாண்புமிகு பிரதமர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் தமிழ்ப் பாடலை மேற்கோள் காட்டினார்.
தேசியக் கல்விக் கொள்கை 2020 மூலம், மத்திய அரசு அடிப்படைக் கல்வி ஒருவரின் தாய்மொழியில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்பட்டுள்ளது. மலேயா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 லிருந்து 2014 வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த நீங்கள், தமிழ் மொழியை பெருமைப்படுத்த எதுவும் செய்யவில்லை. தமிழகம் பெற வேண்டிய நிதியின் சரியான பங்கையும் பெறவில்லை.
நீங்கள் ஜீரணிக்க முடியாத சில உண்மைகள் இதோ.
கடந்த 2004 2014 வரையிலான பத்தாண்டு காலத்தில், தமிழகம் ₹1,52,902 கோடியை மானியங்கள் மற்றும் வரிப் பங்கீடாகப் பெற்றது. கடந்த 11 ஆண்டுகளில், தமிழகம், ₹6,14,853 கோடியை மானியங்கள் மற்றும் வரிப் பங்கீடாகப் பெற்றுள்ளது. (உங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் 10 ஆண்டுகளை விட, இது 4 மடங்கு அதிகம்). நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், தமிழகத்திற்கு வருகை தந்தபோது, கடந்த 10 ஆண்டுகளில், மானியங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வாகப் பெறப்பட்ட நிதி தவிர மேற்கொண்டு, வளர்ச்சித் திட்டங்களுக்காக தமிழ்நாடு ₹1.4 லட்சம் கோடியைப் பெற்றதையும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2004 முதல் 2014 வரை, பட்ஜெட் உரையில் தமிழ்நாடு ஐந்து முறை குறிப்பிடப்பட்டது, மேலும் அந்த அறிவிப்புகளுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு வெறும் ₹8,054 கோடி மட்டுமே. இதற்கு நேர்மாறாக. கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்திற்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு 20 மடங்கு அதிகரித்து, ₹1,68,585 கோடியாக உள்ளது.
தொகுதி மறுவரையறைக்குப் பிறகு, மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள் இந்த 848 என்ற எண்ணிக்கை உண்மையானதா என்பது குறித்த ரகசிய ஆவணம் ஏதேனும் உங்களிடம் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, தமிழக மக்களின் நலனுக்காக அந்த ஆவணத்தை நீங்கள் பகிரங்கமாக அன்புடன் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மக்களவை இடங்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரிக்கலாம் என்று நேற்று ஒரு முன்னணி பத்திரிகை ஒரு கருத்தை வெளியிட்டிருந்தது. நாளை, இன்னொரு பத்திரிகை, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரிக்கலாம் என்று ஒரு கட்டுரையை வெளியிடலாம்.
இவை வெறும் ஊடக யூகங்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்ல. இந்த யூகங்களின் அடிப்படையில், தமிழகம் எத்தனை இடங்களைப் பெறும் அல்லது இழக்கும் என்று நீங்கள் முடிவெடுப்பீர்களா? நீங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு. அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டியது உங்கள் கடமை இல்லையா? சத்தியப்பிரமாணம் செய்து, அரசியலமைப்புச் சட்டப்படி பதவியேற்ற உங்கள் பொறுப்பை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இவற்றை நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா? நமது மாநிலத்தில் பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உணரவில்லை.
நமது மாநிலத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனம் கூட, திமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் பாலியல் குற்றவாளிகளின் வேட்டைக் களமாக மாறியுள்ளது. அமைதியான மாநிலம் தற்போது போதைப்பொருள்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஜாமீனில் வெளிவந்து. வழக்கு விசாரணையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு அமைச்சர். எந்த நேரத்திலும் மீண்டும் சிறைக்குத் திரும்பலாம்.
ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு அமைச்சர், தண்டனைக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார். ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள பல அமைச்சர்கள், இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருத்தல் என கடந்த 4 ஆண்டுகளாக உங்கள் ஆட்சிக்கான சான்றிதழ். நீங்கள் பெருமைப்படக் கூடிய ஒன்றாக இல்லை.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நிர்வாகச் சீர்கேடு, உச்சம் தொட்ட ஊழல், முடங்கிப்போன அரசாங்கம் என தமிழகம் திண்டாடிக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு நாளும் விடியோ ரீல்களைப் படமாக்க ஷூட்டிங் நடத்தவும், உங்கள் கற்பனையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும் மட்டுமே உங்கள் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தயவுசெய்து, மக்கள் நலன் மீது உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் இன்றைய உங்கள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான உங்கள் தந்தையாரின் இருண்ட ஆட்சியே சிறப்பாகத் தெரிந்தது என்று தமிழகப் பொதுமக்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
உங்கள் கடிதத்தில் தமிழகத்தின் மொழிக் கொள்கையைக் குறித்தும் குறிப்பிட்டிருந்தீர்கள். நாங்கள் உங்களிடம் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறோம். ஆனால் நீங்களும், உங்கள் கட்சியும் அந்தக் கேள்வியைத் தொடர்ந்து தவிர்த்து வருகிறீர்கள். மீண்டும் கேட்கிறோம்.
ஒரு தனியார் பள்ளி மாணவருக்கு மூன்றாவது மொழியைக் கற்க வாய்ப்பு வழங்கப்படும்போது. அது ஏன் எங்கள் ஏழை. எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது?” மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் என்ற தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள் என்ற தகவலை, பொதுமக்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டீர்கள். இது முழுக்க முழுக்க நீங்கள் பரப்பும் கற்பனையான மற்றும் ஆதாரமற்ற அச்சம் என்பதால், மார்ச் 5. 2025 அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்பதை ஆதரித்து தமிழக பாஜக மார்ச் 5ம் தேதி, தனது கையெழுத்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறது என்பதையும், இந்தக் கடிதத்தின் மூலம் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அண்ணாமலை கடிதத்தில் கூறியுள்ளார்.