கள்ளக்குறிச்சி அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் நனைந்து 10 டன் நெல் சேதமடைந்த நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததே சேதத்திற்கு காரணம் எனக்கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூட்டடி கள்ளக்குறிச்சி கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வரும் இவர்கள், ஆண்டுதோறும் அறுவடை செய்த நெல்லை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால் இம்முறை அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாத நிலையில், அறுவடை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், அதிகாலை பெய்த கனமழையால் பள்ளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த 10 டன் நெற்பயிர்கள், மழையில் நனைந்து சேதமடைந்தன.
தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், உளுந்தூர்பேட்டை – சேந்தநாடு சாலையில் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.