திருவள்ளூர் அருகே மணல் குவாரியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்டப் பணிக்காக கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குவாரி அமைக்க மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, அதே இடத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்கள் அரசு ஆவணங்களை ஒப்படைத்த அவர்கள், தங்களை அகதிகளாக அறிவிக்கக்கோரி போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை முற்றுகையிட்ட கரடிப்புத்தூர் கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மணல் அள்ளும் பணிகள் தொடங்கிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.