லண்டன் மாநகரில் வரும் 8ஆம் தேதி தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை, வாசல் வரை வந்து இளையராஜா நேரில் வரவேற்றார். பின்னர் இளையராஜாவுக்கு சால்வை அணித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், லண்டனில் இளையராஜா அரங்கேற்ற உள்ள சிம்பொனி இசையின் குறிப்புகளையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள பதிவில், ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள்.
தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான #இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.