பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி மாா்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.
இந்தத் தோ்வை 3 ஆயிரத்து 316 தோ்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 518 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 மாணவா்களும், 18 ஆயிரத்து 344 தனித்தோ்வா்களும், 145 கைதிகளும் அடங்குவா்.
தேர்வறைக் கண்காணிப்பு பணியில் 43 ஆயிரத்து 446 ஆசிரியா்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 470 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தோ்வறைக்குள் கைப்பேசி கொண்டு வரக் கூடாது, விடைத்தாள்களில் சிறப்பு குறியீடு, பெயா் குறிப்பிடக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
தோ்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவா்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையை தொடர்பு கொள்ள செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக் கல்வித்துறையின் இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத்துறை அறிவித்துள்ளது.