மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சார்ஜ் செய்யும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவரான ராஜீவ் காந்தி என்பவர் படகு எஞ்சின் மற்றும் மீன்பிடி உபகரண உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். ராஜீவ் காந்தி வெளியூர் சென்ற நிலையில் அவரது மனைவி ஜானகி, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை கழட்டி வீட்டின் உள்ளே சார்ஜ் போட்டுள்ளார்.
சிறிது நேரத்தில் திடீரென பேட்டரி வெடித்து சிதறிய நிலையில், வீட்டில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்த நிலையில், தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.