அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆண்டுதோறும் மாசி 20ஆம் தேதி அவதார தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 193வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலையில் சூரிய உதயத்தின்போது பள்ளியறையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடலில் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோயில் நடை திறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்ன தர்மம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா சிவ சிவ.. ஹர ஹர.. என கோஷம் எழுப்பினர்.