திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிடோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
அதில், திருப்பரங்குன்றம் கோயிலில் எவ்வித உயிர்பலியிடுதலும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாகவும், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமபந்தி விருந்து அளித்தது இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கானது நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்
அதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.